கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

கரூரில் கடந்த செப்.27 அன்று இரவு தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடுமாறு எம்.எல்.ரவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம் மனுவை விசாரித்த மதுரைக் கிளை அமர்வு, ஒரு விசாரணை நடைபெற்று அதில் திருப்தி இல்லாவிட்டால் விசாரணையை சிபிஐக்கு மாற்றும்படி கோரலாம். ஆனால், ஆரம்ப நிலையிலேயே விசாரணையை சிபிஐக்கு மாற்றுமாறு எவ்வாறு கோரமுடியும் என கேள்வி எழுப்பியது.

மனுதாரர் பாதிக்கப்பட்டவரா என நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், ‘இல்லை’ என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், எம் எல் ரவியின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். மேலும், சிபிஐ விசாரணை கோரியவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்தது.

விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர்கள் என்றும், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நினைத்துப் பாருங்கள். யாராவது இப்படி நடக்கும் என நினைத்துப் பார்;த்திருப்பார்களா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Comments are closed.