துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இளம்பெண் : 7 பேர் கைது!

துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்ட  இளம்பெண்ணை மீட்டு, இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேசம் மந்த்சௌர் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று கர்பா (Garba) நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளம் பெண்ணை அங்கு திடீரென நுழைந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது.

இதனைக் கண்ட அங்கிருந்த மற்ற பெண்கள் சிதறி ஓடினர்.


அப் பெண் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி தகவலறிந்த மந்த்சௌர் போலீஸார் துரிதமாக செயல்பட்டு, சிசிடிவியில் பதிவான காட்சிகளின் உதவியுடன், சில மணி நேரங்களிலேயே அக் கடத்தல் கும்பலைக் கண்டுபிடித்து கைது செய்து, அப் பெண்ணை பத்திரமாக மீட்டனர். அப் பெண்ணை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் போலீஸார் கண்டறிந்து கைப்பற்றினர்.

அப் பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்திய நபர்கள் அவரது குடும்பத்தினர் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. அப் பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதும், அதனால் அதிருப்தியடைந்த அப் பெண் வீட்டைவிட்டு வெளியேறி அதே மாவட்டத்தில் வேறொரு பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார் என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Comments are closed.