திமுக கூட்டணியில் ஒரே கொள்கை எனில் அனைத்து கட்சிகளையும் திமுகவில் இணைத்துவிடலாமே என அதிமுக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இராஜபாளையம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களிடையே பேசுகையில், திமுகவுக்கு கூட்டணிதான் வலிமை என்றால், எங்களுக்கு மக்கள்தான் வலிமை என்றார்.
எங்களுக்கு கொள்கை இல்லை என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன். திமுகவை எதிர்த்து சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் கம்யூனிஸ்டுகள் பேசுவதில்லை. அவர்களுக்கு கொள்கை இல்லாததால்தான் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டனர் என்றார் எடப்பாடி பழனிசாமி.
மத்திய ஆட்சியை அகற்ற வேண்டுமென இண்டியா கூட்டணியை அமைத்துள்ளனர். அவர்களுக்கு என்ன ஒரே கொள்கையா இருக்கிறது? திமுக கூட்டணிக்கு ஒரே கொள்கை என்றால், அனைத்து கட்சிகளையும் திமுகவில் இணைத்துவிடலாமே என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தற்போது 6 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. அரசு ஊழியர்கள், செவிலியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், விவசாயிகள் என யாருடைய போராட்டத்துக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் குரல் கொடுக்கவில்லை என சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி, திமுகவின் தவறுகளை கம்யூனிஸ்டுகள் சுமக்கக்கூடாது என்றார்.

Comments are closed.