மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி தொடரும், 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட தமிழகத்துக்கான மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கென பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022அம் ஆண்டு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்தனர்.

சுமார் 650 பக்கங்கள் கொண்ட மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் 2024 ஜுலை 1ஆம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், முதல்;கட்டமாக, பள்ளிக் கல்வித்துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது. தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையே கடைப்பிடிக்க வேண்டும். கல்வி மாநிலப் பட்டியலில் வரவேண்டும், நீட் தேர்வு நடத்தக்கூடாது என்பன உள்ளிட்ட அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

மேலும், 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி தொடரும், 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.