நெல் கொள்முதல் விவகாரத்தில் தமிழக அரசு தவறான தகவலைக் கூறி விவசாயிகளை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்டா விவசாயிகளுக்கு இத் தீபாவளி கண்ணீர் தீபாவளியாகதான் போனது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இடைவிடாது பெய்துவரும் தொடர் கனமழையால் தஞ்சை மாவட்டத்தில் 1,700 ஏக்கரில் குறுவை, சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை கொட்டி வைத்து, விவசாயிகள் பல நாள்களாக காத்துக் கிடக்கின்றனர். மழையில் நனைந்த மூட்டைகளில் இருந்து நெல்மணிகள் முளைத்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில், தஞ்சை அருகே காட்டூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘நானும் ஒரு விவசாயி. எனவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க அரசை வலியுறுத்துவேன்’ என உறுதி அளித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 2000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக திமுக அரசு அறிவித்து இருந்தது. ஆனால், விவசாயிகளிடம் இதுகுறித்து கேட்டபோது வெறும் 800 மூட்டைகள்தான் கொள்முதல் செய்வதாக கூறுகின்றனர்.
தமிழக அரசு தவறான தகவலைக் கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது. எனவே, விவசாயிகளுக்கு இத் தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் இருந்திருக்கிறது” எனக் குற்றஞ்சாட்டினார்.
காட்டூரைத் தொடர்ந்து, மூர்த்தியம்மாள்புரம், திருவாரூர் ஆகிய இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

Comments are closed.