விஜய் அளித்த ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிய பெண்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவரின் மனைவி, தவெக தலைவர் விஜய் அளித்த நிவாரண நிதி ரூ.20 லட்சத்தை திங்கள்கிழமை திருப்பி அனுப்பினார்.

கரூரில் செப்.27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்டதின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கோடங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரும் இறந்தார். இதையடுத்து விஜய் சார்பில் ரமேஷின் மனைவி சங்கவியின் வங்கி கணக்குக்கு அக்.19ஆம் தேதி ரூ.20 லட்சம் நிவாரண நிதி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் திங்கள்கிழமை சென்னைக்கு வரவழைத்து சந்தித்தார். இதனிடையே சங்கவிக்கு தெரியாமல் அவரது உறவினர்கள் 3 பேரை தவெக நிர்வாகிகள் அழைத்துச் சென்றதால் அதிருப்தியடைந்த சங்கவி, விஜய் அனுப்பி வைத்த ரூ.20 லட்சம் நிதியை பெறப்பட்ட வங்கிக் கணக்குக்கே திருப்பி அனுப்பினார்.

இது தொடர்பாக கூறுகையில், “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூறுவதாகத் தெரிவித்து இருந்தார். ஆனால், அவர் கரூருக்கு வரவில்லை. நான் எதிர்பார்த்தது ஆறுதல் மட்டுமே. பணத்தை அல்ல. அதனால் பணத்தை திருப்பி அனுப்பியுள்ளேன்” என்றார் சங்கவி.

Comments are closed.