பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் வேண்டுகோள்!
‘கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக தொண்டர்களை கைது செய்வதை விட்டு, பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த அரசியல் பயணம் இதைவிட இன்னும் வலிமையுடன் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கரூரில் செப்.27ஆம் தேதி நடைபெற்ற விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச் சம்பவத்திற்கு பிறகு இரண்டு நாள்கள் அமைதி காத்த விஜய், செவ்வாய்க்கிழமை காணொலியை வெளியிட்டார்.
அக் காணொலியில் அவர் பேசியிருப்பதாவது:
என் வாழ்க்கையில் இதுபோன்ற வலி நிறைந்த சூழ்நிலையை நான் எதிர்கொண்டதே இல்லை. மனது முழுவதும் வலி மட்டுமே உள்ளது. இச் சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னை பார்க்க வருவதற்கு என் மீது வைத்துள்ள அன்பும், பாசமும் தான் காரணம். அதனால்தான், மக்களுடைய பாதுகாப்பில் எந்த ஒரு சமரசமும் செய்யக்கூடாது என்பதற்காக, காவல்துறையிடம் பாதுகாப்பான இடங்களுக்கு அனுமதி கேட்டோம். ஆனால், நடக்க கூடாத ஒன்று நடந்து விட்டது. நானும் மனிதன் தான்.
கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க நினைத்தேன். நான் அங்கு செல்வதால் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக தவிர்த்தேன். உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். நான் என்ன சொன்னாலும் உயிரிழந்தவர்களுக்கு இது ஈடு இணை ஆகாது. புhதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பேன்.
எங்களது வலியைப் புரிந்து கொண்டு எங்களுக்கு ஆதரவாக பேசிய அரசியல் தலைவர்கள், நண்பர்களுக்கு நன்றி. இதுவரை ஐந்து மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டோம். ஆனால் அங்கு எங்கும் நடக்காத அசம்பாவிதம் கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது? எப்படி நடக்கிறது? மக்களுக்கு அனைத்து உண்மையும் தெரியும்.
கரூரைச் சேர்ந்தவர்கள் இச்சம்பவம் குறித்த உண்மைகளை வெளியே சொல்லும்போது, அந்த கடவுளே நேரில் வந்து உண்மையை சொல்வது போல இருந்தது. விரைவில் அனைத்து உண்மைகளும் வெளிவரும்.
எங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நாங்கள் சென்று பேசினோம். வேறு எந்தத் தவறையும் செய்யவில்லை. இருப்பினும், தவெக தொண்டர்கள், எங்களுக்கு ஆதரவாக பேசும் சமூக வலைதள நண்பர்கள் மீது வழக்குப் பதிந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினுக்கு பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் எனது வீட்டில் அல்லது அலுவலகத்தில் தான் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். அவர்கள் மீது கை வைக்காதீர்கள். இந்த அரசியல் பயணம் இதைவிட இன்னும் வலிமையுடன் தொடரும் என விஜய் அக் காணொலியில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.