திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை அவரது தாயின் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்ததாக காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத் தார்கள் ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று திங்கள்கிழமை இரவு திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருந்தது. வாகனத்தின் ஓட்டுநர், அவரது அக்கா மற்றும் அக்கா மகளான 19 வயது இளம் பெண் ஆகியோரை உடன் அழைத்து வந்துள்ளார்.
திருவண்ணாமலை புறவழிச்சாலை ஏந்தல் கிராமம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு சுமார் 2 மணியளவில் வாகனம் வந்து கொண்டிருந்தபோது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகியோர் அவ் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது, வாகனத்தில் வாழைத் தார்கள் ஏற்றிச் செல்வதாகவும், தன்னுடன் அக்கா மற்றும் அக்கா மகளை கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகவும் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
அப் பெண்கள் இருவரையம் தாங்கள் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாக காவலர்கள் கூறியுள்ளனர். அதற்கு ஓட்டுநர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அவரை காவலர்கள் மிரட்டி, பெண்கள் இருவரையும் அழைத்துச் சென்று, ஏந்தல் கிராமம் அருகே இளம்பெண்ணை அவரது தாயின் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், அப் பெண்கள் இருவரையும் அழைத்துவந்து புறவழிச்சாலை அருகே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.
அதிகாலை 4 மணியளவில் அவ்வழியாகச் சென்றவர்கள் பெண்கள் இருவர் அழுது கொண்டிருப்பதைக் கண்டு, விசாரித்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு 108 அவசர கால ஊர்தி மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர், மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நேரில் விசாரணை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட காவலர்கள் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகிய இருவர் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவ்விருவரையும் கைது செய்தனர்.

Comments are closed.