பாஜக எம்.பி.க்கள் பயணித்த கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

கோவையில் இருந்து கரூர் சென்று கொண்டிருந்த பிரபல நடிகை ஹேமமாலினி உள்ளிட்ட பாஜக எம்.பி.க்களின் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின.

இவ்விபத்தில் கார்கள் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக, எம்.பி.க்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழ்ந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க எம்.பி.ஹேமமாலினி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி குழு அமைத்தது.
ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவில் அனுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால் உள்பட 8 மூத்த எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

இன்று காலை கோவை வந்தடைந்த இக்குழுவினர், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வுசெய்து, பாதிக்கப்பட்டோரைச் சந்திப்பதற்காக சாலை வழியாக கரூருக்கு கார்களில் புறப்பட்டனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள சின்னியம்பாளையம் பகுதியில் ஹேமமாலினி காரும், பாஜக எம்.பி.க்கள் பயணித்த மற்றொரு காரும் மோதி விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில், நல்வாய்ப்பாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், கார்களுக்கு மட்டும் சிறிது சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறிது நேரத்தில் அதே கார்களில் கரூர் நோக்கி எம்.பி.க்கள் புறப்பட்டுச் சென்றனர்.

Comments are closed.