பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் நாகை கிழக்கு கடற்கiரைச் சாலையில் தலையில் காயங்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்து கிடந்தார்.
அவர் விபத்தில் இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கரை பிரதான சாலையைச் சேர்ந்தவர் 38 வயது ராஜாராமன். கிராம நிர்வாக அலுவலரான இவர் கடந்த 2024ஆண்டு லஞ்சம் பெற்றதற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, அவ் வழக்கு தொடர்பாக நாகை நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் நாகை கிழக்கு கடற்கரைச் சாலையில் செல்லூர் அருகே இன்று அதிகாலை தலையில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த வெளிப்பாளையம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து அவரது சடலத்தைக் கைப்பற்றி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து ராஜாராமன் விபத்தில் இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த ராஜாராமனுக்கு மனோசித்ரா என்ற மனைவியும், தஸ்வின் என்ற எட்டு வயது மகனும் உள்ளனர். இவரது மனைவி காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

Comments are closed.