அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐயிடம் வசமாக சிக்கிய நிகிதா!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு தொடர்புடைய நகைத் திருட்டு புகாரிலும் சிபிஐ தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது.

இதன்மூலம், காரில் வைக்கப்பட்டிருந்த தனது நகைகள் காணாமல் போனதாக பேராசிரியை நிகிதா அளித்த புகார் உண்மையா அல்லது பொய்யானதா என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஜுன் 27ஆம் தேதி வந்த பேராசிரியை நிகிதா, தனது காரில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அக் கோயிலின் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.


விசாரணையின்போது, ஜுன் 28ஆம் தேதி அஜித்குமார் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, தனிப்படையைச் சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 போலீஸார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இவ்வழக்கு, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பல்வேறு தரப்பினரிடமும் நேரடியாக விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவர்மன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.

சிபிஐ அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், கோயில் காவலாளி அஜித்குமார் மீதான திருட்டு வழக்கு இன்னும் தொடங்கப்படவில்லை. திருட்டு வழக்கின் ஆவணங்கள் போலீஸார் இன்னும் ஒருவாரத்தில் சிபிஐக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், சிபிஐ அதிகாரிகளிடம் தமிழக காவல்துறையினர் நகைத் திருட்டு வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தனர். இதையடுத்து, திருட்டு புகாரிலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இவ்விசாரணையில், பேராசிரியை நிகிதாவின் நகைகள் உண்மையிலேயே காணாமல் போயினவா அல்லது அஜித்குமாரை பழிவாங்குவதற்காக சொல்லப்பட்ட பொய்க் குற்றச்சாட்டா என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.

தனது தாயாருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக நகைகளை கழற்றி காரில் வைத்திருந்ததாகவும், ஸ்கேன் சென்டருக்கு போகும் வழியில் அவரது தாயார் கேட்டுக்கொண்டதற்கிணங்க கோயிலுக்கு வந்ததாகவும், கோயிலில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற பின்னர், நகைகளை அணிவதற்காக தேடியபோது நகைகள் வைக்கப்பட்டிருந்த பையைக் காணவில்லை என்றும் நிகிதா தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

உண்மையிலேயே அவர் ஸ்கேன் சென்டருக்குதான் சென்று கொண்டிருந்தாரா, ஸ்கேன் எடுப்பதற்காக கழற்றி வைத்த நகைகளை ஸ்கேன் எடுப்பதற்கு முன்னரே மீண்டும் எதற்காக அணிய விரும்பினார், நகைகள் எப்போது, எங்கே வாங்கப்பட்டன, அதற்கான ஆவணங்கள் இருக்கின்றனவா என்பன உள்ளிட்ட தகவல்கள் சிபிஐ விசாரணையில் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பேராசிரியை நிகிதா சிபிஐயிடம் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார் என்கின்றனர் இதுகுறித்த விஷயம் அறிந்தவர்கள்.

Comments are closed.