தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அன்றைய தினம் உரிய நேரத்தில், அதாவது மாலை 4 மணிக்கு, வந்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது என முன்னாள் அமைச்சரும் கரூர் எம்எல்ஏ-வுமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் செந்தில் பாலாஜி கூறுகையில், கடந்த 27ஆம் தேதி கரூரில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் துயரமானது. யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதது. அத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றார்.
கரூரில் மட்டும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி என விஜய் கேள்வி எழுப்பியுள்ளது குறித்து செய்தியார்கள் கேட்டதற்கு, இச் சம்பவத்தை பொதுவாக அரசியலாக பார்க்க விரும்பவில்லை. மனிதாபிமான அடிப்படையில் உதவிக்கரம் நீட்டப்பட்டது. உயிரிழந்த 41 பேரில் 31 பேர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். யார் மீது தவறு என பேசாமல் இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்றார் செந்தில் பாலாஜி.
எந்த அரசியல் கட்சியின் கூட்டமாக இருந்தாலும் இனி இதுபோன்று நடக்க கூடாது. வேலுச்சாமிபுரத்தில் 1000 முதல் 2000 செருப்புகள் வீதியில் கிடந்தன. ஆனால் ஒரு தண்ணீர் பாட்டில் கூட இல்லை. மக்களுக்கு குடிநீரோ, பிஸ்கட் பாக்கெட்டோ வழங்கப்படவில்லை என இதில் இருந்தே தெரிகிறது.
விஜய் அன்று மாலை 4 மணிக்கு வந்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Comments are closed.