பொய்யான தகவல் கொடுத்து போலீஸாரை இரவு முழுவதும் அலைக்கழித்த இளைஞர் கைது!

தஞ்சாவூர் அருகே வசிக்கும் தனது காதலியை பார்க்க வந்தபோது தன்னையும் தனது காதலியையும் ஒரு கும்பல் அரிவாளால் தாக்கியதாக பொய்யான தகவலைத் தெரிவித்து காவல்துறையினரை இரவு முழுவதும் அலையவிட்ட கடலூர் மாவட்ட இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் இளந்தை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் செல்வகுமார். இவர் ஆக.18 இரவு கடலூரில் உள்ள தனது நண்பர்களைத் தொடர்பு கொண்டு, தஞ்சாவூர் மாவட்டம் கத்தரிநத்தம் கிராமத்தில் வசிக்கும் தனது காதலியைப் பார்க்க வந்ததாகவும், அப்போது ஒரு கும்பல் அப் பெண்ணையும் தன்னையும் அரிவாளால் தாக்கியதாவும், தற்போது தப்பித்து ஓடிக் கொண்டிருப்பதாகவும் கூறி, தன்னை காப்பாற்றுமாறு தகவல் கொடுத்துள்ளார்.

அத்தகவலின் அடிப்படையில், அவரது நண்பர்கள் இத்தகவலை தஞ்சாவூர் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தெரிவித்ததனர். இரவு 10 மணிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இரண்டு காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட குழுவினர் இரவு முழுவதும் தொடர் விசாரணை நடத்தினர்.

அவ் விசாரணையில், தான் காதலித்த பெண் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றியதால் அப் பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வேண்டுமென்றே இப்படி ஒரு தவறான தகவலை கூறியுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, பொய்யான தகவலைக் கூறி காவல்துறையினரின் வழக்கமான இரவு ரோந்து உள்ளிட்ட பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி இரவு முழுவதும் காவல்துறையினரை அலையவிட்ட இளைஞர் செல்வகுமாரை, தஞ்சாவூர் நகர மேற்கு காவல் நிiலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Comments are closed.