தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை: ராகுல் எச்சரிக்கை!

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குத் திருட்டில் ஈடுபட்ட மூன்று தேர்தல் ஆணையர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் வாக்குரிமை பயணத்தை ராகுல் காந்தி பிகாரில் ஞாயிற்றுக் கிழமை தொடங்கினார்.

இரண்டாவது நாளாக ஒளரங்காபாத் கயா ஜி-யில் வாக்குரிமைப் பேரணி நடைபெற்றது.
கயா ஜி-யில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் நனைந்தபடி ராகுல்காந்தி பேசினார்.

அப்போது பேசுகையில், நாடு முழுவதும் உங்களிடம் பிரமாணப் பத்திரம் கேட்கும் என தேர்தல் ஆணையத்துக்கு நான் கூற விரும்புகிறேன். எங்களுக்கு சிறிது அவகாசம் கொடுங்கள், ஒவ்வொரு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளிலும் உங்கள் திருட்டை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்றார் ராகுல் காந்தி.

பிரதமர் மோடி சிறப்பு தொகுப்பு குறித்து பேசுவது போல், தேர்தல் ஆணையமும் பிகாருக்கு ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்’ என்ற சிறப்பு தொகுப்பைக் கொடுத்துள்ளது. இது ஒரு புதிய வகையான வாக்குத் திருட்டு.

நான் சொல்வதை செய்பவன். மேடையில் பொய் சொல்ல மாட்டேன் என்பது உங்களுக்கு தெரியும். தேர்தல் ஆணையர்கள் பாஜக உறுப்பினர்களாக அக்கட்சிக்கு வேலை செய்வதாக தேஜஸ்வி கூறினார். ஆனால், ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். பிகார் மற்றும் தில்லியில் இந்தியா கூட்டணி ஒரு நாள் ஆட்சி அமைக்கும். அன்று (தேர்தல் ஆணையர்கள்) மூவர் மீதும் நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்தார் ராகுல் காந்தி.

Comments are closed.