அரியலூர் மாவட்ட குழந்கைள் நலக்குழு உறப்பினரான வழக்கறிஞர் இளையராஜா என்பவர் அம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளை தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பராமிரப்பு இல்லங்களில் (Children Care Institutions) சேர்க்க போலியான உத்தரவு கடிதம் தயாரித்து வழங்கியதுடன், அதில் தன்னுடன் பணிபுரிந்த இரண்டு பெண் உறுப்பினர்களின் கையொழுத்தை ஃபோர்ஜரியாக போட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து க்ரைம் பிராஞ்ச் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இம் மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தி, வழக்கறிஞர் இளையராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரியலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோருக்கு குழந்தைகள் நலக்குழுத் தலைவர் வழக்கறிஞர் செந்தில்குமார் ஜூலை 18ஆம் தேதி ஒரு புகார் மனு அனுப்பி இருந்தார். அம் மனுவில் ஏனைய மூன்று பெண் உறுப்பினர்களும் கையெழுத்திட்டு இருந்தனர்.
போலியான சேர்க்கை உத்தரவு கடிதம் மூலம் தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் செயல்பட்டுவரும் 4 இல்லங்களில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 31 குழந்தைகள் சேர்க்கப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
ஆயினும், என்ன காரணத்தினாலோ அப் புகார் மனு மீது மாவட்ட நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் கால தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், இம் மோசடி குறித்து நமது ‘போர்வாள்’ இணைய தளத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி விரிவான செய்தி வெளியாகி வைரலானது.
இதைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தின்பேரில், அம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் இம் மோசடி குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் சாஸ்திரியை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.

போலியான சேர்க்கை உத்தரவு கடிதம் தயாரித்து அதில் சக பெண் உறுப்பினர்கள் இருவரின் கையெழுத்துகளைப் ஃபோர்ஜரியாக போட்டிருப்பது தண்டனைக்குரிய குற்றச் செயல் ஆகும். அதோடு, இம் முறைகேட்டில் பணப் பரிவர்த்தனையும் இடம்பெற்றிருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்நிலையில், அரியலூர் மாவட்ட எஸ்.பி.யின் உத்தரவின்பேரில், அம் மாவட்ட க்ரைம் பிராஞ்ச் போலீஸார் இம் மோசடி குறித்து முதல்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தைகள் நலக்குழுவைச் சேர்ந்த இரண்டு பெண் உறுப்பினர்கள், தஞ்சை மாவட்ட குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோரிடம்; க்ரைம் பிராஞ்ச் போலீஸார் இதுவரை விசாரணை நடத்தியுள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் இவ் விசாரணை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர், விசாரணை அறிக்கை மாவட்ட எஸ்.பி.யிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அவரது வழிகாட்டுதலின்பேரில் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர் க்ரைம் பிராஞ்ச் போலீஸார்.

Comments are closed.