தமிழக அரசின் முதன்மைச் செயலர் பீலா வெங்கடேசனின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த பீலா வெங்கடேசன், சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை இரவு இறந்தார். அவருக்கு வயது 56.
சென்னை கொட்டிவாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பீலா வெங்கடேசனின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1997ஆம் ஆண்டு பிகார் மாநிலப் பிரிவில் இருந்து குடிமைப் பணிக்கு தேர்ச்சி பெற்ற பீலா, மணவாழ்க்கை காரணமாக தமிழ்நாடு மாநில பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக மாறினார்.
அதன்பிறகு, செங்கல்பட்டு சார் ஆட்சியராக தமிழ்நாட்டில் பணியைத் தொடங்கினார். சுகாதாரம், வணிகவரி, கைத்தறி மற்றும் துணிநூல் துறைகளின் செயலராக பொறுப்பு வகித்தார். கரோனா காலத்தில் சுகாதாரத் துறைச் செயலராக பணிபுரிந்தார்.
தற்போது எரிசக்தித் துறை முதன்மைச் செயலராக பணியாற்றி வந்த சூழலில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, கடந்த சில மாதங்களாக மருத்துவமனையிலும், அவரது இல்லத்தில் இருந்தவாறும் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.