பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மத்திய புலனாய்வு ஏஜென்ஸியான சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக, இதுவரை விசாரணை நடத்தி திரட்டிய ஆவணங்கள் அனைத்தையும் உடனடியாக சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க சிபி-சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அவரது சகோதரர் கீனோஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வுத்தரவை இன்று பிறப்பித்தது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 2024ஆம் ஆண்டு ஜுலை 5ஆம் தேதி, அவர் கட்டிவந்த வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டார்.
இவ் வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2 பேர் தலைமறைவாக உள்ளனர்.
இந்நிலையில், இவ் வழக்கை போலீஸார் நியாயமாக விசாரிக்கவில்லை. எனவே, விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளருமான கீனோஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பல்வேறு தரப்பு வாதங்களையும் கேட்டு, விசாரணை நிறைவடைந்த நிலையில். இன்று தீர்ப்பளித்தது.
இவ் வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பி.வேல்முருகன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
6 மாதத்தில் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அரசியல் மற்றும ஊடக தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும். இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளார்.

Comments are closed.