அரசு உதவிபெறும் நேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது புத்தகப் பையில் கத்தி ஒன்றை மறைத்து வகுப்பறைக்கு கொண்டு வந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன் விளையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
திசையன்விளையில் உள்ள அரசு உதவிபெறும் இப்பள்ளியில் வழக்கம்போல் மாணவ, மாணவியர் நேற்று காலை பள்ளிக்கு வந்தனர். இப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது புத்தகப் பையில் புத்தகங்களுக்கிடையே நீளமான கத்தி ஒன்றை மறைத்து வைத்து வகுப்பறைக்கு கொண்டு வந்துள்ளதைக் கண்டுபிடித்த ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார். பின்னர், தலைமை ஆசிரியரிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.
அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் உடனடியாக திசையன்விளை காவல்நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் அளித்தார்.
அதன்பேரில், திசையன்விளை காவல் நிலைய போலீஸார் அப் பள்ளிக்கு விரைந்து வந்து 9-ஆம் வகுப்பு மாணவனிடம் இருந்து கத்தியைப் பறிமுதல் செய்து, அம் மாணவனிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
தன்னை அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவன் இதற்கு முன்பு கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும், அதனால் அம் மாணவன் தன்னை ஏதாவது செய்து விடுவானோ என்ற அச்சத்தில் தற்காப்புக்காக புத்தகப் பையில் கத்தியை மறைத்து வகுப்பறைக்கு கொண்டு வந்துள்ளதாக 9-ஆம் வகுப்பு மாணவர் தெரிவித்தார்.
இத் தகவலைக் கேட்டு, அப் பள்ளி ஆசிரியர்களும், சக மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அம் மாணவரை எச்சரித்துவிட்டு போலீஸார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Comments are closed.