தெரு நாய்களை காப்பகத்துக்கு அனுப்பத் தேவையில்லை என்றும், தடுப்பூசி மற்றும் கருத்தடைக்குப் பிறகு அவற்றைப் பிடித்த இடத்திலேயே விட்டுவிட வேண்டும் என உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது.
அதே நேரத்தில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அல்லது ஆக்ரோஷமான தெரு நாய்களை காப்பகங்களில் வைத்து பராமரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தில்லியில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதை, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், தில்லி – என்.சி.ஆர். பகுதியில் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து நிரந்தரமாக காப்பகங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என ஆகஸ்ட் 11ஆம் தேதி உத்தரவிட்டது.
தலைநகர் தில்லியில் எட்டு வாரங்களுக்குள் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தெரு நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைத்துப் பராமரிக்கவும், குறைந்தது 5000 நாய்களைக் கொண்ட ஆரம்பக் காப்பகங்கள் நிறுவவும் நகராட்சி அதிகாரிகளுக்கு நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந் நடவடிக்கையைத் தடுக்கும் எந்தவொரு அமைப்பாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து விலங்கு நல அமைப்புகள் போராட்டம் மேற்கொண்டதுடன், இத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தன.

இவ் விவகாரத்தை அவசர வழக்காகக் கருதி விசாரணைக்குப் பட்டியலிட கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், பரிசீலிப்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், இவ்வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
அதன்படி, மேல்முறையீட்டு வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், ஆக.11ஆம் தேதி இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில் மாற்றம் மட்டும் செய்வதாகக் கூறினர் நீதிபதிகள்.
அதன்படி, நாய்களுக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு அவற்றைப் பிடித்த இடத்திலேயே விட்டுவிடவும், ரேபிஸ் போன்ற நோய்களை ஏற்படுத்தக்கூடிய நாய்களை மட்டும் காப்பகங்களில் அடைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், “தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க அனுமதிக்கப்படாது. தெரு நாய்களுக்கு உணவளிக்க பிரத்யேக இடங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதுபோன்று பொது இடங்களில் உணவு வழங்கும்போது பல அசம்பாவி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எனவே நாய்களுக்கு உணவு வழங்க தில்லி மாநகராட்சி இடங்களைத் தேர்வு செய்து கொடுக்க வேண்டும். மற்ற இடங்களில் அனுமதி இல்லை.

அரசு ஊழியர்கள் தங்களது கடமையைச் செய்வதற்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது. இடையூறு ஏற்பட்டால் புகார் அளிக்க தில்லி மாநகராட்சி, அவசர உதவி எண்ணை உருவாக்கி அறிவிக்க வேண்டும். மேலும், இடையூறு ஏற்படுத்துபவர்கள் ரூ.25,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். விலங்கு ஆர்வலர்கள் தில்லி மாநகராட்சி மூலமாக நாய்களைத் தத்தெடுக்கலாம்” என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இப் பிரச்சினையை கையாள்வதற்கான தேசியக் கொள்கையை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Comments are closed.