6 ஆண்டுகள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத லஞ்ச ஒழிப்புத்துறை!

தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களை லஞ்சம் பெற்றுக்கொண்டு நியமனம் செய்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்து 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தராக முனைவர் ஜி.பாஸ்கரன் பணிபுரிந்த காலகட்டத்தில் (06.08.2015 முதல் 05.08.2018 வரை) பேராசிரியர் மற்றும் இணைப்  பேராசிரியர்களை பணி நியமனம் செய்ய லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் பூர்வாங்க விசாரணை மேற்கொண்டனர். அதில், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பெரிய அளவில் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

 முன்னாள் துணைவேந்தர் முனைவர் ஜி.பாஸ்கரன்

எஸ்சி/எஸ்டி வகுப்பைச் சேர்ந்த 3 பேராசியர்கள் மற்றும் 5 இணைப் பேராசிரியர்களுக்கான பணியிடங்கள், மற்றும் பொதுப்பிரிவில் 20 பேராசிரியர்கள் மற்றும் 9 இணைப் பேராசிரியர்களுக்கான பணியிடங்கள் என மொத்தம் 37 பணியிடங்களுக்கான தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்ப் பல்கலைக் கழகம் சார்பில் கடந்த 04.01.2016 அன்று பத்திரிகைகளில் விளம்பர அறிவிப்பு வெளியானது. ஆனால், என்ன காரணத்தினாலோ அப் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படவில்லை.

இந்நிலையில், எஸ்சி/எஸ்டி பிரிவு மற்றும் பொதுப் பிரிவினர்க்கான 27 பேராசிரியர்கள் மற்றும் 18 இணைப் பேராசிரியர்கள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்று 26.04.2017 அன்று மீண்டும் விளம்பர அறிவிப்பு வெளியானது.

இப் பணியிடங்களில் 23 பணியிடங்களுக்கு மட்டும் நேர்காணல் நடத்தப்பட்டது. மீதமுள்ள 22 பணியிடங்களுக்கு, போதுமான விண்ணப்பங்கள் பெறப்படவில்லை, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கவில்லை என்ற காரணங்களைக் காட்டி நேர்காணல் நடத்தப்படவில்லை.

ஆனால், தேர்வுக்குழுவின் தலைவரான துணைவேந்தர் பாஸ்கரன், தேர்வுக்குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து, பணி நியமனம் தொடர்பான பல்கலை மானியக்குழுவின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அரசின் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு, 2017ஆம் ஆண்டு மே மாதம் 10 பேராசிரியர்கள் மற்றும் 11 இணைப் பேராசிரியர்கள் என மொத்தம் 21 நபர்களை தேர்வு செய்துள்ளார் என்பது லஞ்ச ஒழிப்புத் துறையினரின் பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்தது.

அதாவது, இப் பணியிடங்களுக்கான நபர்களை துணை வேந்தர் பாஸ்கரன் ஏற்கெனவே தேர்வு செய்து, அவர்களுக்கு நேர்காணலின்போது கூடுதல் மதிப்பெண்கள் வழங்குமாறு தேர்வுக் குழுவினருக்கு அறிவுறுத்தி, போதிய கல்வித்தகுதி இல்லாத, குறைந்த முன் அனுபவம் கொண்ட நபர்களை தேர்வு செய்திருப்பது தெரிய வந்தது.

சக்தி சரவணன்

இதற்காக, துணைவேந்தர் பாஸ்கரன், நேர்காணல் நடைபெறுவதற்கு முன்னர், 5 நபர்களிடம் நேரடியாகவும், மேலும் 5 நபர்களிடம் சக்தி சரவணன் என்ற பல்கலைக்கழக ஊழியர் மூலமும் ரூ.15 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பெற முயற்சித்திருப்பது லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதுமட்டுமின்றி, அப்போதைய பதிவாளர் முத்துக்குமார், தொலைநிலை கல்வி இயக்குநர் என்.பாஸ்கரன் ஆகியோருடன் இணைந்து, துணை வேந்தர் பாஸ்கரன் தினக்கூலி அடிப்படையில் 70 நபர்களை பணியமர்த்தி பல்கலைக்கழகத்துக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியிருப்பதும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, துணை வேந்தர் ஜி.பாஸ்கரன், அப்போதைய பதிவாளர் எஸ்.முத்துக்குமார், பதிவாளரின் உதவியாளர் சக்தி சரவணன், அப்போதைய தொலைநிலைக் கல்வி இயக்குநர் என்.பாஸ்கரன் ஆகிய நால்வர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையினர் 14.11.2019 அன்று வழக்குப் பதிவு (FIR No.10/2019) செய்தனர்.

இவ்வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும், என்ன காரணத்தினாலோ, இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

இதுகுறித்து விசாரித்தபோது, “எங்களது விசாரணை மற்றும் தொடர் நடவடிக்கைகளில் எந்தவொரு சுணக்கமும் இல்லை. குற்றப்பத்திரிகை தயார் செய்துவிட்டோம். ஆனால், அது 10,000 பக்கங்களுக்கு மேல் இருப்பதால் அவற்றை குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக பிழை திருத்தம் செய்வது, நகல் எடுப்பது, புத்தக வடிவில் தயாரிப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.  இன்னும் இரு வாரங்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என ஊழல் தடுப்புத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, இவ்வழக்கு விசாரணை தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இவ்வழக்கு விசாரணை விரைவில் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Comments are closed.