நவீன கருவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று காலை 7 மணி முதல் பாரோ ஃபோகஸ் என்ற நவீன கருவி மூலம் ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமுற்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் உத்தரவின்பேரில் குஜராத்தைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் அக்டோபர் 17ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக முதன்முதலாக வழக்குப் பதிவு செய்த கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணனிடம் வியாழக்கிழமை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், மதுரை சிபிஐ அலுவலகத்தில் இருந்து கூடுதலாக 7 அதிகாரிகள் மற்றும் 2 தொழில்நுட்ப வல்லுனர்கள் வெள்ளிக்கிழமை கரூர் வந்தடைந்தனர். பின்னர், கூட்ட நெரிசல் சம்பவத்தை நேரில் பார்த்ததாக காவல்துறையால் அடையாளங் காணப்பட்ட 4 வியாபாரிகளை வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.

அதைத் தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் பிரவீண் குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகேஷ் குமார் உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகள் வேலுச்சாமிபுரத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்று, தவெக பிரசாரம் நடைபெற்ற இடம் முதல் ஈரோடு சாலையில் சுமார் 250 மீ தொலைவுக்கு நடந்து சென்று மக்கள் நின்றிருந்த இடங்களைப் பார்வையிட்டதுடன், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

அதோடு, அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களிடம் தங்களது கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தால், அக் கேமராவில் பதிவான பதிவுகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்று காலை 7 மணிக்கு வந்த சிபிஐ அதிகாரிகள் பாரோ ஃபோகஸ் கருவி மூலம் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.