மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

 

அதிமுகவின் பொற்கால ஆட்சியை மீண்டும் மலரச் செய்ய வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து மடல் அனுப்பியுள்ளார்.
அதிமுகவின் 54ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார்.

அவ் வாழ்த்து மடலில்,  விலைவாசி உயர்வால் தமிழக மக்கள் தலையில் வரிச் சுமைகளை சுமத்தி, சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கி வருகிறது இந்த திமுக அரசு.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயமும் கஞ்சா புழக்கமும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. தமிழக அரசைப் பாதுகாக்க வேண்டிய அரசோ, மக்களைக் காப்பாற்றாமல், அவர்களை புதைகுழியில் தள்ளியுள்ளது  என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “தமிழகத்தில் நடைபெற்றுவரும் மக்கள் விரோத ஆட்சியை விரட்டவும், அதிமுக பேரியக்கத்தை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தவும் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நமது தோட்டத்தில் களைகளை நீக்கி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கிறது.

பொன்னான வசந்த காலம் நம் கண்ணெதிரே தெரிகிறது. வருகிற 2026ல் கழகத்தின் ஆட்சி அமைவதை, கழகத்தின் வெற்றியை எத்தனை சக்திகள் ஒன்றுகூடி வந்தாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

தமிழக மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி, சட்டம்-ஒழுங்கை சீர்குலையச் செய்துள்ள இந்த திமுகவின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை எழுதி, அல்லும் பகலும் கண் துஞ்சாது களப் பணியாற்றி, பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் மலரச் செய்திட இந்த இனிய நன்னாளில், நாம் அனைவரும் உளமாற உறுதியேற்போம்” என்றும் கூறியுள்ளார்.

Comments are closed.