மகளிர் உரிமைத் தொகை: டிசம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும்!

புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதி உடையவர்களுக்கு வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய துணை முதல்வர் உதயநிதி, தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார் என்றார்.

கடந்த 2023 செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாள் அன்று மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிரின் பொருளாதார விடுதலைக்கு வழிவகுக்கும் இத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் 1.14 கோடி மகளிருக்கு இவ்வுரிமைத் தொகையை முதல்வர் வழங்கி வருகிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை சுமார் 26 மாதங்களில் ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.26,000 அரசு சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழக அரசு சுமார் ரூ.30,000 கோடியை மகளிர் உரிமைத் தொகைக்காக வழங்கி இருக்கிறது என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது, தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பங்கேற்று, மகளிர் உரிமைத் தொகை பெற புதிதாக 28 லட்சம் பெண்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இவர்களது விண்ணப்பங்கள் வருவாய்த்துறை மூலம் நவம்பர் 30க்குள் நிறைவு பெற்று, தகுதியான மகளிருக்கு வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக உதயநிதி தெரிவித்துள்ளார்.

Comments are closed.