புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை, சென்னை கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகே, மீடியாக்காரர்கள் மற்றும் போலீஸார் முன்னிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சரமாரியாக தாக்கிவிட்டு சர்வசாதாரணமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.
சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியை சந்திப்பதற்காக ஏர்போர்ட் மூர்த்தி காத்திருந்தபோது இத்தாக்குதல் நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து ஏர்போர்ட் மூர்த்தி யூடியூப் சேனல்களில் அவதூறாகப் பேசியதாக குற்றஞ்சாட்டி விசிக-வினர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தினர்.
மீடியாக்கள் மற்றும் போலீஸார் முன்னிலையில் ஏர்போர்ட் மூர்த்தியை தாக்கிய விசிக-வினர் அங்கிருந்து சர்வசாதாரணமாக புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.
இச் சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மூர்த்திக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்துக்கு வெளியே பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு சமூக, அரசியல் கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதிலிருந்தே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக சீர்குலைந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
ஏர்போர்ட் மூர்த்தியை ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டு தாக்கும்போது அங்கிருந்த காவலர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தனர். மூர்த்தியைப் பாதுகாக்கவோ, குற்றவாளிகளைப் பிடிக்கவோ அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Comments are closed.