மக்கள் பிரச்சினைகள் குறித்து கேளுங்கள். கூட்டணி மற்றும் விஜய் குறித்து கேட்காதீர்கள் என செய்திளார்களிடம் கோபமாக தெரிவித்தார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, இந்தியா முழுவதும் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், தேர்தல் ஆணையம் ஒரு பொம்மைபோல செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
2026 தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “கூட்டணி குறித்தெல்லாம் நீங்களாக கற்பனை செய்து கொண்டால் நான் பதில் சொல்ல முடியாது. நாங்கள் எங்கள் வேலையை செய்து கொண்டிருக்கிறோம்” என்றார் பிரேமலதா.
2026 தேர்தலில் போட்டியிடுவீர்களா என கேட்டதற்கு, தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கின்றன. இன்னும் நிறைய காலம் இருக்கிறது. அதுகுறித்து உரிய காலத்தில் நாங்களே அறிவிப்போம் என்றார் பிரேமலதா.
அப்போது, தவெக மாநாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு பிரேமலதா கோபமடைந்தார்.
“நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். பத்திரிகையாளர்களுக்கு இதைத்தவிர வேறு கேள்விகளே இல்லையா? நான் தினமும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். ஒன்று கூட்டணி குறித்து கேட்கிறீர்கள், இல்லையென்றால், நடிகர் விஜய் குறித்து கேட்கிறீர்கள். இந்த இரண்டு கேள்விகளைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு கேட்கத் தோன்றவில்லையா?” என்றார் பிரேமலதா.
அதோடு, “நான் தூத்துக்குடிக்கு வந்திருக்கிறேன். இங்குள்ள மக்கள் பிரச்சினைகள் குறித்து ஏன் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்? உப்பளத் தொழிலளார்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு, குறு தொழில்கள் நசிந்துள்ளன. கப்பல் தளம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் என எத்தனையோ இருக்கின்றன. பத்திரிகையாளர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண். நீங்கள் ஏன் மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர மறுக்கிறீர்கள்?” என காட்டமாகக் கேட்டார் பிரேமலதா.

Comments are closed.