வைகை ஆற்றில் வீசப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் வீசப்பட்டு மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவைக்கு பொதுமக்கள் மனு கொடுத்து வருகின்றனர். இம் மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் தீர்வு காணப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தில் பூவந்தி, கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெற்றன. இதில் பொதுமக்களிடம் இருந்து பல ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன.

இந்நிலையில், திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் மிதந்தன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அம் மனுக்களில் பெரும்பாலானவை பட்டா மாற்றம் செய்யக்கோரி வழங்கப்பட்டவை. தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் ஆற்றில் மிதந்த மனுக்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Comments are closed.