தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இலங்கைத் தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக க்யூ பிராஞ்ச் போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஒன்னரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. க்யூ பிராஞ்ச் போலீஸார் ஆமை வேகத்தில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேதுபாவாசத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இலங்கைத் தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக இந்திய அரசின் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வருவதாக கடந்த 2023ஆம் ஆண்டு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அப்போதைய க்யூ பிராஞ்ச் டிஎஸ்பி சிவசங்கரன் தலைமையிலான 10 பேர் கொண்ட போலீஸார் புலன்விசாரணை செய்து ஆண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (64) என்ற ஓய்வுபெற்ற அஞ்சலக ஊழியர், பட்டுக்கோட்டை ரயில்வே நிலையம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (52), ராஜமடம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (42) ஆகிய மூவர் கொண்ட கும்பலைப் பிடித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அவ்விசாரணையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த இலங்கைத் தமிழர்களுக்கு போலியான ஆவணங்கள் தயாரித்து அதை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தும், உரிய போலீஸ் விசாரணை நடத்தாமல் அதற்கு ஒப்புதல் வழங்கியும், பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ள சிலரின் துணையோடு இந்திய அரசின் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இச் சட்டவிரோத செயலில், போலி ஆவணங்கள் தயாரிப்பதில் ‘எக்ஸ்பெர்ட்’ ஆன திருச்சி கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த வைத்தியநாதன் (52), கும்பகோணம் பம்பப்படையூரைச் சேர்ந்த சங்கரன், சேதுபாவாசத்த்திரம் காவல் நிலைய ரைட்டர் மற்றும் தலைமைக் காவலர் சேஷா (47), இச்சட்டவிரோத செயலுக்காக ரைட்டர் சேஷாவால் தனிப்பட்ட முறையில் பிரத்யேமாக நியமிக்கப்பட்ட கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பாலசிங்கம் (36), கும்பகோணம் மகாமகம் குளக்கரையில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்திவரும் ராஜு (31), மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தபால்காரர் பக்ருதீன் உள்ளிட்டோருக்கும் தொடர்பிருப்பது க்யூ பிராஞ்ச் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மொத்தம் 38 நபர்களுக்கு போலி பாஸ்போர்ட்டுகள் விநியோகம் செய்யப்பட்டிருப்பதும். அவற்றில் 28 பாஸ்போர்ட்டுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதும் க்யூ பிராஞ்ச் போலீஸாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஓரிஜினல் போட்டோக்களுடன் போலி ஆவணங்களை இணைத்து கும்பகோணம் மகாமகம் குளக்கரையில் ராஜு நடத்திவரும் கம்ப்யூட்டர் சென்டரில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருபபதும், விண்ணப்பத்தில் போலியான முகவரி கொடுத்திருப்பதும் தெரியவந்தது. பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பாஸ்போர்ட்டுகளை அஞ்சலக ஊழியர் கோவிந்தராஜ் ஒவ்வொரு பாஸ்போர்ட்டுக்கும் தலா ரூ.1000 லஞ்சமாக பெற்றுக் கொண்டு அவற்றை வடிவேல் மற்றும் சங்கர் ஆகிய இருவரிடமும் ‘டெலிவரி’ செய்திருப்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
(இடது மேல்புறமிருந்து) கோவிந்தராஜ், வடிவேல், சங்கர், பாலசிங்கம், வைத்தியநாதன் மற்றும் ராஜு)
இதையடுத்து, கோவிந்தராஜ், வடிவேல், சங்கர், பாலசிங்கம், வைத்தியநாதன், ராஜு ஆகிய 6 பேரையும் க்யூ பிராஞ்ச் போலீஸார் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் முக்கிய நபரான சேதுபாவாசத்திரம் காவல்நிலைய ரைட்டர் சேஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, இதில் முக்கிய குற்றவாளியான ரைட்டர் சேஷாவை கைது செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்து ரைட்டர் சேஷாவை க்யூ பிராஞ்ச் போலீஸார் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி கைது செய்து பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒன்னரை ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. க்யூ பிராஞ்ச் போலீஸார் ஆமை வேகத்தில் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆனால் இக்குற்றச்சாட்டை க்யூ பிராஞ்ச் போலீஸார் மறுக்கின்றனர். போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற்ற இலங்கதை; தமிழர்கள் அனைவரும் பல்வேறு வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று அங்கே பணிபுரிந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, அவர்களது செல்பேசிகளில் பதிவான உரையாடல்களை தற்போது ஆய்வு செய்து வருகிறோம். அவற்றை எழுத்து வடிவில் கொண்டுவருவதில் (ட்ரன்ஸ்க்ரைப் செய்வதில்) கால தாமதம் ஆகி வருகிறது. மற்றபடி இவ்வழக்கு விசாரணையில் மெத்தனப்போக்கு எதுவுமில்லை என்கின்றனர் க்யூ பிராஞ்ச் போலீஸார்.

Comments are closed.