பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற வட்டாட்சியரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் இரா.கிருஷ்ணகுமார் (31). இவரது உறவினருக்கு சொந்தமான 11,070 சதுர அடி இடம் திருச்சி கே.சாத்தனூரில் உள்ளது. அதற்கான பட்டாவில், ‘ஆணையர், திருச்சி மாநகராட்சி’ என்று தவறுதலாக இருந்ததை கணினியில் மாற்றம் செய்யக்கோரி திருச்சி வருவாய்க் கோட்டாட்சியரகத்தில் அண்மையில் விண்ணப்பித்து இருந்தார்.
அவரது விண்ணப்ப மனுவின் நிலை குறித்து தெரிந்து கொள்ள வருவாய்க் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரும் வட்டாட்சியருமான மு.அண்ணாதுரை (50) என்பவரை அணுகினார் கிருஷ்ணகுமார்.
அப்போது, பட்டா பெயர் மாற்ற விண்ணப்ப மனுவை கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்ய வட்டாட்சியர் அண்ணாதுரை ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணகுமார், இது குறித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பின்னர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் அறிவுறுத்தலின்பேரில், ரசாயனம் தடவிய ரூ.2 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள கோட்டாட்சியரகத்தில் வட்டாட்சியர் அண்ணாதுரையிடம் கிருஷ்ணகுமார் வியாழக்கிழமை வழங்கினார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார், அண்ணாதுரையை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
மேலும், துவாக்குடிமலை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிலும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.

Comments are closed.