சொந்த கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பால் பதவி இழந்த திமுக நகராட்சி தலைவி!

திட்டக்குடி நகராட்சி தலைவரான திமுகவைச் சேர்ந்த வெண்ணிலாவுக்கு எதிராக அவரது கட்சியைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றிபெற்றதால், அவர் பதவியை இழந்தார்.

திட்டக்குடி நகராட்சியில் மொத்த நகர்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 24. இதில், திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 15. அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 5. ஏனைய நால்வரும் திமுக ஆதரவு உறுப்பினர்கள்.

இந்நிலையில், நகராட்சியில் முறைகேடுகள் நடப்பதாக நகராட்சி தலைவர் வெண்ணிலா மீது கட்சிபாகுபாடின்றி நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டிவந்தனர். ஆனால், கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கணேசன் தலையிட்டு திமுக நகர்மன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தி வந்தார்.

இந்நிலையில், திமுக, அதிமுக, சுயேட்சை நகர்மன்ற உறுப்பினர்கள் என 17 பேர், வெண்ணிலாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர, நகராட்சி பொறியாளர் ராமரிடம் செப்டம்பர் 22ஆம் தேதி மனு அளித்தனர்.

மொத்தம் 14 குற்றச்சாட்டுகள் அடங்கிய மனுவை 17 நகர்மன்ற உறுப்பினர்களும் தனித்தனியே கையெழுத்திட்டுக் கொடுத்தனர்.

இதையடுத்து, நகர்மன்றத் தலைவர் வெண்ணிலா மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது நேற்று ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆதில், திமுக-15, அதிமுக-5, சுயேட்சைகள்-3 என மொத்தம் 23 உறுப்பினர்கள் வெண்ணிலாவுக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து அவர் நகர்மன்றத் தலைவர் பதவியை இழந்ததாக நகராட்சி ஆணையர் முரளிதரன் அறிவித்தார்.

திமுகவைச் சேர்ந்த நகர்மன்றத் தலைவர் வெண்ணிலாவின் பதவியை திமுக நகர்மன்ற உறுப்பினர்களே பறித்த சம்பவம் ஆளுங்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.