தில்லி ரோகிணி பகுதியில் பிகாரைச் சேர்ந்த 4 ரௌடிகள் காவல்துறையினருடனான என்கௌன்டரில் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக மிகப்பெரிய குற்றச் செயலில் ஈடுபட அவர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை சார்பில் கூறப்படுவதாவது:
பிகாரின் பிரபல ரௌடியான ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக குற்றச் செயலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், பிகார் காவல்துறையினரும் தில்லி குற்றப்பிரிவு காவல்துறையினரும் இணைந்து இன்று அதிகாலை 2.20 மணியளவில் தில்லி ரோகிணி பகுதியில் சந்தேகத்தின்பேரில் சிலரை சோதனை செய்துள்ளனர்.

அப்போது, காவல்துறையினர் மீது நான்கு ரௌடிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் ரஞ்சன் பதக், பிம்லேஷ் சாஹ்னி (25), மணிஸ் பதக் (33), அமன் தாகுர் (21) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த நால்வரையும் தில்லி ரோஹிணி மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்ற நிலையில், அந் நால்வரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
மேலும், என்கௌன்டரில் கொல்லப்பட்ட நால்வரும் பிகாரில் கொலை, ஆயுதக் கடத்தல் உள்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என தில்லி குற்றப்பிரிவு துணை ஆணையர் சஞ்சீவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.