போலியான ஆர்டர் தயாரித்து வழங்கிய வழக்கறிஞர்!

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவற்ற  குழந்தைகளை அரசின்  விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு   தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும்  குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் (Children Care Institutions) சேர்க்க போலியான உத்தரவு கடிதம்  தயாரித்து  வழங்கி  அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார்   குழந்தைகள்  நலக்குழு உறுப்பினராக பணிபுரிந்த  இளையராஜா என்ற  வழக்கறிஞர்.

 

 மாவட்ட குழந்தைகள் நலக்குழுத்  தலைவர் மற்றும் உடன் பணிபுரியும்  இதர  உறுப்பினர்களுக்குகூட இதுகுறித்து எதுவும்  தெரிவிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு,  தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக இப்படி  போலியான  உத்தரவு கடிதத்தை  தயாரித்துள்ளார் வழக்கறிஞர் இளையராஜா.

 

இதில் மற்றுமொரு  அதிர்ச்சிகரமான தகவல் என்னவெனில்,  தன்னுடன் பணிபுரிந்த  இரண்டு பெண் உறுப்பினர்களின் கையெழுத்துகளை அந்த உத்தரவு கடிதத்தில்  ஃபோர்ஜரியாக போட்டுள்ளார் வழக்கறிஞர் இளையராஜா.

 

குழந்தைகள் நலக்குழுத் தலைவர் செந்தில் குமார் தலைமையில் மூன்று ஆண்டுகளாக  செயல்பட்டு வந்த அரியலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின்  பதவிக்காலம் ஏப்ரல் மாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அக்குழுவின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு, அக்குழு ஜூலை  18 ஆம் தேதி தமிழக அரசால்  கலைக்கப்பட்டது.

 

இதற்கிடையே, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் சித்திரக்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில்  சேர்க்கப்பட்ட அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்  ஒருவர்  சொந்த காரணங்களுக்காக அங்கிருந்து தன்னை உடனடியாக  விடுவிக்குமாறு சில வாரங்களுக்கு முன்பு அரியலூர்  மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

 

அம் மாணவருக்கு  டிஸ்சார்ஜ் கடிதம் வழங்குவதற்காக,  அவருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட அட்மிஷன் உத்தரவு கடித நகலை அலுவலக கோப்பில் இருந்து தேடி எடுத்த  குழந்தைகள் நலக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அதற்கு காரணம், அக் கடிதம் போலியாக தயாரிக்கப்பட்டு இருப்பது  தெரிய வந்தது.

 

அச்  சேர்க்கை உத்தரவு கடிதத்தில் குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் செந்தில் குமாரின் கையெழுத்து இல்லை. அதோடு, வழக்கத்திற்கு மாறாக, அக்கடிதத்தில் இரண்டு பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களின்  கையெழுத்துகள் காணப்பட்டன. ஆனால்,  அவ்விரு பெண் உறுப்பினர்களின் கையெழுத்துகளும் ஃபோர்ஜரியாக போடப்பட்டுள்ளதும், அலுவலக சீல் அச்செடுக்கபட்டு அதேபோல ஒரு  போலியான சீல்  தயாரிக்கப்பட்டு அக்கடிதத்தில் இடப்பட்டிருப்பதும்  கண்டுபிடிக்கப்பட்டது.

 

இச் சட்டவிரோதச் செயலை   குழந்தைகள் நலக்குழுவின் உறுப்பினரான வழக்கறிஞர் இளையராஜா  செய்திருப்பது விசாரணையில்  தெரியவந்துள்ளது.

 

மேலும், அரியலூர் மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக 8 இல்லங்கள் செயல்பட்டு வரும் நிலையில்,   தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர் இளையராஜா  செயல்பட்டு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவற்ற 35 சிறுவர்,  சிறுமியரை திருவையாறு வட்டத்தில் செயல்பட்டு வரும் 4  இல்லங்களில் சேர்க்க போலியான உத்தரவு தயாரித்து வழங்கி இருப்பதும் தெரிய வந்தது.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நலக்குழுத் தலைவர் செந்தில் குமார் இதுகுறித்து  விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் மீது சட்டப்படி உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி அரியலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், தஞ்சை மாவட்ட ஆட்சியர், குழந்தைகள் நலக்குழுத் தலைவர் ஆகியோருக்கு ஜுலை 21 ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளார்.

 

கடிதம் அனுப்பப்பட்டு ஏறத்தாழ இரண்டு வாரங்கள் ஆகியும் அரியலூர் மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இக் குற்றச்செயல் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் என்ன காரணத்தினாலோ  இதுவரை காவல்துறையில்  புகார் அளிக்கவில்லை.  ஆனால்,  இம்முறைகேடுகள் குறித்த செய்தி எதுவும் வெளியே கசிந்து விடாமல் தடுப்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்  சரவணன் மற்றும்  அத்துறை உயர்  அதிகாரிகள்.

 

இதற்கிடையே, செந்தில் குமார் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், தஞ்சை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் துரிதமாக செயல்பட்டு குற்றச்சாட்டுக்குள்ளான திருவையாறு வட்டத்தில் இயங்கி வரும் நான்கு இல்லங்களிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

 

அந்த நான்கு இல்லங்களிலும் போலியான சேர்க்கை உத்தரவு கடிதம் மூலம்  அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதுகுறித்து தொடர்பு கொண்டு கேட்டபோது,

” எங்கள் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில்,  சித்திரக்குடி கிராமம் வள்ளுவர் குழந்தைகள் இல்லத்தில் 2  குழந்தைகள், வெள்ளாம்பெரம்பூர் கிராமம் விவேகானந்தா குழந்தைகள் இல்லத்தில் 19  குழந்தைகள், தில்லைஸ்தானம் கிராமம் ராமகிருஷ்ணா குழந்தைகள் இல்லத்தில் 6  குழந்தைகள் மற்றும் கடுவெளி கிராமம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா குழந்தைகள் இல்லத்தில் 8  குழந்தைகள் என  மொத்தம் 35 குழந்தைகள் போலியான சேர்க்கை உத்தரவு கடிதம் மூலம் சேர்க்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு விரைவில்  அறிக்கை அனுப்பப்படும்,” என்றார்  குழந்தைகள் நலக்குழுத் தலைவர் சசிகலா.

 

இதில் கொடுமை என்னவெனில், இம்முறைகேடுகள் குறித்து  மொபைல் எண்ணில்   தொடர்பு கொண்டு கேட்டபோது, ஆதரவற்ற  குழந்தைகளின் நலனுக்காக இப்படி செய்ததாகக் கூறி  எந்தவொரு குற்ற உணர்வும்  இன்றி தனது செயலை நியாயப்படுத்தினார் வழக்கறிஞர் இளையராஜா.

 

இரண்டு பெண் உறுப்பினர்களின் கையெழுத்தை ஃபோர்ஜரியாக போட்டு போலியான  சேர்க்கை உத்தரவு கடிதம் தயாரித்து இருக்கிறீர்கள். சட்டப்படிப்பு படித்த வழக்கறிஞரான நீங்களே இப்படி ஒரு குற்றச் செயலில் ஈடுபடலாமா எனக் கேட்டதற்கு,  “குழந்தைகளின் நலனுக்காக என்ன  வேண்டுமானாலும் செய்யலாம் என  விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. எனவே, நான் குழந்தைகளின் நலனுக்காகவே   இப்படி செய்தேன்” என்றார்   வழக்கறிஞர் இளையராஜா.

Comments are closed.