இளைஞர் மீது காரை ஏற்றி இழுத்துச் சென்ற எஸ்.ஐ!

இளைஞர் ஒருவரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியதுடன், அதை தட்டிக்கேட்ட இளஞர் மீது காரை ஏற்ற முயற்சித்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளார் காந்திராஜன் என்ற நெல்லை மாநகர காவல்துறை போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்.

நெல்லை மாநகர் காவல்துறை போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் காந்திராஜன் (59). சுத்தமல்லியில் வசித்து வருகிறார். இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தனது சொந்த காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்றிரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது கார் சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பின்புறமாக மோதியது.  இதனால் மோட்டார் சைக்களை ஓட்டிவந்த இளைஞர் சேதமடைந்த தனது மோட்டார் சைக்கிளை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, காரை ஓட்டி வந்த சிறப்பு உதவி ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


ஆத்திரமடைந்த சிறப்பு எஸ்.ஐ. காந்திராஜன் மீண்டும் காரின் இருக்கையில் அமர்ந்து அங்கிருந்து புறப்பட முயற்சித்துள்ளார். அதனால் அந்த இளைஞர் எஸ.ஐ.யின் காரை அதன் முன்புறமாக நின்றவாறு செல்லவிடாமல் மறித்துள்ளார்.

ஆனால், அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் சிறப்பு எஸ்.ஐ. தனது காரை ஓட்டியுள்ளார். காரின் பேனட்டில் அமர்ந்த நிலையில் ‘காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்..’ என அந்த இளைஞர் கத்தியதைப் பொருட்படுத்தாமல் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வரை காரை ஓட்டிச் சென்றுள்ளார் சிறப்பு எஸ்.ஐ. அப்போது அவர் மது போதையில் இருந்துள்ளதாகத் தெரிகிறது.

இச் சம்பவத்தை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அவ் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சிறப்பு எஸ்.ஐ. காந்திராஜனை ஆயுதப்படைக்கு மாற்றி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார்.

காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி

இதுகுறித்து காவல் துணை ஆணையர் பிரசன்னகுமார் கூறுகையில், பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சிறப்பு எஸ்.ஐ. காந்திராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்ப்டுள்ளார் என்றும், அவர் மீது உரிய விசாரணைக்கு பின்னர் குற்ற நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Comments are closed.