ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியும் குற்றஞ்சாட்டப்பட்ட குழந்தைகள் நலக்குழு முன்னாள் உறுப்பினர் இளையராஜா என்ற வழக்கறிஞரை என்ன காரணத்தினாலோ அரியலூர் மாவட்ட காவல்துறையினர் இன்னும் கைது செய்யவில்லை.
குற்றஞ்சாட்டப்பட்ட இளையராஜா திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் என்ற ஒரே காரணத்தால் போலீஸார் அவரை வேண்டுமென்றே கைது செய்யாமல் தவிர்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
வழக்கறிஞர் இளையராஜா மீதான குற்றச்சாட்டுகள்:
அரியலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினரான இளையராஜா தன்னிச்சையாக செயல்பட்டு போலியான சேர்க்கை உத்தரவு தயாரித்து தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் தனியாரால் நடத்தப்பட்டுவரும் 4 இல்லங்களில் 35 குழந்தைகளை சேர்க்க ஆணை வழங்கியுள்ளார்.
அலுவலக முத்திரையை போலியாக தயாரித்து பயன்படுத்தியுள்ளார்.
தன்னுடன் பணிபுரிந்த சக இரு பெண் உறுப்பினர்களின் கையெழுத்தை அச் சேர்க்கை கடிதத்தில் ஃபோர்ஜரியாக போட்டுள்ளார்.
இதுகுறித்து கேட்ட இரு பெண் உறுப்பினர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டியுள்ளார் இளையராஜா.
இளையராஜாவின் இச் சட்டவிரோத செயல்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி குழந்தைகள் நலக்குழுத் தலைவர் செந்தில்குமார் மற்றும் ஏனைய 3 பெண் உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு 18.07.2025 அன்று ஒரு புகார் மனு அனுப்பினர். ஆனால், அப் புகார் மனு மீது உடனடியாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து நமது ‘போர்வாள்’ செய்தி இணையதளத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி ‘எக்ஸ்க்ளுசிவ்’ செய்தி வெளியானது. அதன் பின்னர், பிரச்சினை சூடு பிடிக்கத் தொடங்கியது.
அரியலூர் மாவட்ட ஆட்சியரின் வாய்மொழி உத்தரவின்பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் இம்முறைகேடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரை 07.08.2025 அன்று சந்தித்து முறையாக புகார் அளித்தார். அதனடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் பூர்வாங்க விசாரணை மேற்கொண்டனர்.
இக் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கறிஞர் இளையராஜா மீது வழக்குப்பதிவு (FIR No.9/2025 Date: 04.09.2025) செய்தனர்.

பாரதிய நியாய சங்கித சட்டத்தின் கீழ் இளையராஜா மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்குப்பதிவு செய்து இரண்டு வாரங்கள் ஆகியும் வழக்கறிஞர் இளையராஜாவை என்னகாரணத்தினாலோ போலீஸார் இன்னும் கைது செய்யவில்லை.
குற்றச்சாட்டுக்குள்ளான இளையராஜா இன்னும் முன் ஜாமீன் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, வழக்கறிஞர் இளையராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்து குறித்து இரண்டு நாள்களுக்கு முன்பு வரை உள்ளுர் பத்திரிகையாளர்களுக்கு கூட போலீஸார் தகவல் தெரிவிக்காமல் ரகசியம் காத்து வந்தனர்.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரியை நேற்று அவரது மொபைலில் தொடர்புகொண்டு கேட்டபோது, கரூரில் முதல்வர் ஸ்டாலினின் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி., தனது பாதுகாப்பு வீரரிடம் மொபைலை கொடுத்து நம்மிடம் விபரங்களைக் கேட்டறிந்து, ‘விரைவில் கைது செய்யப்படுவார்’ என ஒற்றை வரியில் பதிலளித்தார்.

Comments are closed.