கோயில் கருவறையில் தீ விபத்து: அர்ச்சகர் உள்பட 7 பேர் காயம்!

வாரணாசியில் கோயில் கருவறையில் ஏற்பட்ட தீ விபத்தில் அக் கோயிலின் தலைமை அர்ச்சகர் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த 7 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாரணாசியில் உள்ள ஆத்ம விஸ்வேஷ்வர் மகாதேவ் கோயிலில் சவான் மாத பௌர்ணமி நாளை முன்னிட்டு சனிக்கிழமையன்று பருத்தியால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


இந்நிலையில், இரவு 8 மணியளவில் கருவறைக்குள் ஆரத்தியின்போது தீப்பிடித்து அது விரைவாகப் பரவியது. இத் தீவிபத்தில் அக் கோயிலின் தலைமை அரச்சகர் உள்பட ஏழு பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் கபீர் சௌராகா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.