அரசு ஊழியர்கள் குற்றச் செயலில் ஈடுட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெகன்நாதன் என்பவர் திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் வெங்கடாச்சலம் என்பவருக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்து பனியன் நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்நிலத்துக்கான வாடகை ஒப்பந்தம் புதுப்பித்தலில் உடன்பாடு ஏற்படாததால், அந்நிலத்தில் கட்டடங்கள், இயந்திரங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் என கட்டுமானங்களுக்கு செலவு செய்த தொகை ரூ.2 கோடியை திரும்பக் கேட்டுள்ளார்.
இதனால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், வெங்கடாச்சலம், அவரது மனைவியான துணை வட்டாட்சியர் கீர்த்தி பிரபா, தெற்கு தெரு காவல் தன்னை மிரட்டியதாகவும், மேலும், பனியன் நிறுவனம் அமைந்துள்ள இடம் விவசாய நிலம் எனக்கூறி கீர்த்தி பிரபா பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும், இதற்கு நல்லூர் சார் பதிவாளர் நாகராஜன் உடந்தையாக இருந்துள்ளதாகவும், எனவே, இந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி ஜெகன்நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு ஊழியர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கலாம் என அறிவுறுத்தினார்.
இவ்வழக்கில் அரசு அதிகாரிகள் குற்றத்தில் ஈடுபட்டதாக மனுதாரர் கருதினால், உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவிட்டு இவ்வழக்கை முடித்து வைத்தார்.

Comments are closed.