காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 31 வயது இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார். அதைக் கண்டித்து அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (31). தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பர்கள் அஜித்கண்ணா, பிரகாஷ். இம்மூவர் மீதும் காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணைக்காக தினேஷ்குமார் உள்ளிட்ட மூவரையும் அண்ணா நகர் போலீஸார் வியாழக்கிழமை காலை விசாரணைக்கு அழைத்துச் சென்று மதுரை வண்டியூர் அம்மா திடல் அருகேயுள்ள புறக்காவல் நிலையத்தில் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், போலீஸ் விசாரணையின்போது தினேஷ்குமார் பரிதாபமாக இறந்துவிட்டார். அவரது உடலை கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினேஷ்குமார் உயிரிழந்தது குறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அண்ணா நகர் காவல் நிலையம் முன்பு திரண்டு, போலீஸாரைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் தினேஷ்குமாரை அடித்துக் கொலை செய்துவிட்டு, அதை மறைக்க முயற்சிப்பதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், அண்ணா நகர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தொடர்புடைய போலீஸார் மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர், மாட்டுத்தாவணி பேருந்து நிலைய முதன்மைச் சாலையில் எம்ஜிஆர் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதனால், கோ.புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
காவல்துறை விசாரணையின்போது இறந்த தினேஷ்குமாரின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குற்றவியல் நடுவர் முன்னிலையில் இன்று கூறாய்வு செய்யப்படும் எனத் தெரிகிறது.

Comments are closed.