திருமணம் ஆகாதவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை!

பொது இடங்களில் காதல் ஜோடிகள் முகம் சுளிக்கும் வகையில், எல்லை மீறும் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, கடற்கரை, பூங்கா உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும் பலனில்லை.

இந்நிலையில், ‘திருமணம் ஆகாதவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை’ என ஓசூரில் உள்ள பூங்கா ஒன்றின் முன்பு வைக்கப்பட்ட பேனரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அப் பேனர் அகற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் ராமநாயக்கன் ஏரிக்கரையில் உள்ள குழந்தைகள் பூங்காவில் நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சி மேற்கொள்வதற்கான கருவிகள்;, தியான மண்டபம், மரப் பூங்கா, சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஏரிக்கரையையொட்டி உட்காருவதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப் பூங்காவில் இரவு நேர காவலாளி இல்லாததால், சமூகவிரோதச் செயல்கள் நடைபெற்று வந்தன. காதல் ஜோடிகள் அத்துமீறும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வந்தன. இதனால், மாநகராட்சி சார்பில் காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். பூங்காவை பகலில் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், ‘திருமணம் ஆகாதவர்கள் உள்ளே நுழைய அனுமதி இல்லை’ என பேனர் நேற்று வைக்கப்பட்டிருந்தது. அதில் தமிழக அரசின் முத்திரை, காவல்துறையின் முத்திரை, காவல் உதவி எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிலும் குறிப்பாக, திருமணம் ஆகாத இளைஞர்களும், பெண்களும் பேனரில் உள்ள வாசகத்தைப் படித்து அதிர்ச்சி அடைந்தனர். இதை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இவ் விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளானதால், சர்ச்சைக்குரிய அப் பேனர்  அகற்றப்பட்டது.

இப் பேனரில் காவல்துறையின் முத்திரை இருந்த நிலையில், காவல்துறை சார்பில் இப் பேனர் வைக்கப்படவில்லை என போலீஸார் மறுத்துள்ளனர். அப்படியெனில், இப்படியொரு சர்ச்சைக்குரிய பேனரை வைத்தது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments are closed.