வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 32 நபர்களிடம் ரூ.2.5 கோடி மோசடி: 2 பேர் அதிரடி கைது!
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 32 நபர்களிடம் ரூ.2.5 கோடி மோசடி செய்த கும்பகோணத்தில் இயங்கிவந்த சசி கன்சல்டன்சி என்ற நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட 2 பேரை தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ராஜா. இவர் வேலை கேட்டு பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்துள்ளார். அதனடிப்படையில், கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள சசி கன்சல்டன்சி என்ற நிறுவனத்தைக் கேள்விபட்டு அதன் உரிமையாளர் சாய் சுதாகர் என்பவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் ராஜா.
அப்போது, ராஜாவை கனடாவுக்கு அனுப்புவதாக சுதாகர் கூறியுள்ளார். மேலும், கனடா செல்வதற்கு ரூ.12 லட்சம் செலவாகும். அதற்கு, ரூ.7.80 லட்சம் முன்பணமாக கட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார் சுதாகர்.
அதை நம்பி, சசி கன்சல்டன்சி உரிமையாளர் சுதாகருக்கு தொடர்புடைய வங்கி மூலம் பண பரிமாற்றம் செய்துள்ளார் ராஜா. இதைத் தொடர்ந்து 6 மாதத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி ஒப்பந்த பத்திரத்தில் கையொப்பம் போட்டு கொடுத்துள்ளார் சுதாகர்.
இரண்டு ஆண்டுகள் ஆகியும் தன்னை வெளிநாட்டுக்கு அனுப்ப கால தாமதம் ஆனதால் நேரில் சென்று கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள சசி கன்சல்டன்சி நிறுவனத்தை பார்த்தபோது அந் நிறுவனம் பூட்டிக் கிடந்தது.
அக்கம்பக்கத்தில் விசாரித்ததில், அந் நிறுவன உரிமையாளர் இதுபோல பலரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்து வருவதாக தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா, காவல்துறையில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில், கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், தலைமறைவாகவுள்ள சுதாகர் இதுபோல 32 நபர்களிடம் ரூ.2.5 கோடி மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், இவ்வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான குழு புலன் விசாரணை செய்து வந்தது.
இவ்வழக்கில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான சென்னையைச் சேர்ந்த சாய் சுதாகர் மற்றும் மகேஷ்பாபு ஆகிய இருவரும் கோயம்புத்தூரில் தலைமறைவாக இருப்பதைக் கண்டுபிடித்து, உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையில் காவலர்கள் அடங்கிய குழு கோயம்புத்தூர் சென்று அவ்விருவரையும் கைது செய்து தஞ்சாவூர் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின்னர், குற்றவாளிகள் இருவரும் கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய, தலைமறைவாகவுள்ள மூன்றாவது குற்றவாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

Comments are closed.