திமுக மட்டும் கூட்டம் நடத்தியது எப்படி?: அதிமுக எம்.பி. தம்பிதுரை கேள்வி

அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கு உண்டான வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்படாத நிலையில், திருவண்ணாமலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு திமுகவிற்கு மட்டும் அனுமதி எப்படி கிடைத்தது என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.

மாநிலங்களவையில் தம்பிதுரை நேற்று பேசியதாவது:

பிரசாரம் என்பது தேர்தல் நடைமுறைகளில் மகிவும் முக்கியமானது. மக்களை சந்திக்கும் வாய்ப்பு அதன் வாயிலாகத்தான் கிடைக்கும். கரூர் சம்பவத்திற்கு பின், தேர்தல் பிரசாரங்களை அரசியல் கட்சிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக தேர்தல் பிரசார வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டன. ஆனாலும், இதுவரையில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் அரசியல் கட்சிகள் தமிழகத்தில் பொதுக்கூட்டமோ, பேரணியோ நடத்த முடியவில்லை. எதிர்க்கட்சிகள் மக்களிடம் சென்று பிரசாரம் செய்ய முடியவில்லை.

ஆனால், திமுகவுக்கு மட்டும் அனுமதி வழங்கி, திருவண்ணாமலையில் இளைஞரணி பொதுக்கூட்டம் நடத்தி உள்ளனர். தமிழகத்தில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் விதிக்கும் அரசு, திமுகவுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடும் விதிக்காதது ஏன்? என தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.

Comments are closed.