பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பிறந்தநாளையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், ‘கட்சிப் பாகுபாடின்றி அனைவரிடமும் பழகும் நயினார் நாகேந்திரன் கோபப்பட்டு நான் பார்த்ததேயில்லை’ எனப் புகழாரம் சூட்டினார்.
தமிழக சட்டப்பேரவை இன்று காலை வழக்கம்போல் தொடங்கி வினா-விடை நேரம் முடிவடைந்தபோது, தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசத் தொடங்கினார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு இன்று பிறந்தநாள். அவரைப் பொருத்தவரை கட்சிப் பாகுபாடின்றி அனைவரிடமும் அன்போடும் அமைதியாகவும் பேசக் கூடியவர். கட்சி பாகுபாடின்றி இருக்கக்கூடிய நயினார் நாகேந்திரன், கோபப்பட்டு நான் பார்த்ததேயில்லை,’ எனக் கூறினார்.

‘எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், அவர் விமரிசனங்களை வைக்கும்போது கூட கோபத்துடன் சொல்ல மாட்டார். அவ்வளவு ஏன், வெளிநடப்பு செய்யும்போது கூட சிரித்துக்கொண்டே வெளிநடப்பு செய்பவர். யாருக்கும் எந்த வகையிலும் கோபம் வராத வகையில் அணுகக் கூடியவர். இன்று 64 வயது முடிந்து 65 வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார்,” என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
ஸ்டாலின் இவ்வாறு கூறியதைக் கேட்ட நயினார் நாகேந்திரன் மற்றும் அங்கிருந்த எம்எல்ஏக்கள் அனைவருமே புன்னகையை வெளிப்படுத்தினர்.
‘அவருக்கு என்னுடைய சார்பிலும், திமுக சார்பிலும், திமுக எம்எல்ஏக்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள் சார்பிலும் இப் பேரவையில் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,’ என்றார் முதல்வர் ஸ்டாலின்.

Comments are closed.