பாஜக மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தேர்தல்ஆணையத்தை தனது மோசடி இயந்திரமாக பாஜக மாற்றியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையம் முறைகேடு செய்ததாக, காங்கிரஸ் எம்.பி.யும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அவரது குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், ராகுல் காந்திக்கு ஆதரவாக தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் ஆணையம் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தேர்தல் ஆணையத்தை பாஜக தனது மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. பெங்களுருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் ஆணையைத் திருடுவதற்கான திட்டமிட்ட சதி. எனது சகோதரரும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் வழங்கிய ஓட்டு திருட்டுச் சான்றுகள் இந்த மோசடியை அம்பலப்படுத்துகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஓவ்வொரு மாநிலத்திற்கும் முழுமையான வாக்காளர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். அரசியல் ரீதியாக வாக்காளர் பட்டியலில் நடக்கும் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நமது ஜனநாயகத்தின் இந்த நாசவேலை குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

திமுக இப்போராட்டத்தில் தோளோடு தோள் நிற்பதாகவும், இந்தியாவின் ஜனநாயகத்தை பாஜக பகலில் கொள்ளையடிப்பதை நாங்கள் அமைதியாகப் பார்க்க மாட்டோம் எனவும் ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவில் கூறியுள்ளார்.

Comments are closed.