மதுரை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் வீட்டு பெண்களை மிரட்டி போலீஸ் உதவி ஆணையர் மற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் குருசாமி, கடந்த 2019ஆம் ஆண்டு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், முன்னாள் அமைச்சர் ஒருவரது தூண்டுதலின்பேரில் காவல்துறையினர் தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் பொய் வழக்குகள் பதிவு செய்து கைது செய்ததாக குற்றஞ்சாட்டி இருந்தார்.
“எனது பேத்திக்கு காது குத்தும் விழா நடக்க இருந்த திருமண மண்டபத்தின் உரிமையாளரை அன்றை மதுரை காவல் உதவி ஆணையர் உதயகுமார், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், மணிகண்டன் ஆகியோர் மிரட்டினர்.
எனது வீட்டிற்கு வந்து சோதனை நடத்தி, காது குத்தும் விழாவில் கிடைத்த பரிசு பணம் ரூ.50 லட்சத்தை எடுத்துச் சென்றனர். ஆனால், ரூ.18.86 லட்சம் மட்டுமே பறிமுதல் செய்ததாக கணக்கில் காட்டினர்.
வீட்டில் இருந்த பெண்களை கைது செய்துவிடுவதாக மிரட்டினர். மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் கவுன்சிலர் குருசாமி, அம் மனுவில், கூறியிருந்தார்.
இம் மனுவை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேற்று (செப்.8) தீர்ப்பளித்தார்.

அத் தீர்ப்பில், மனுதாரரின் வீட்டிற்கு சோதனை நடத்த சென்ற காவல்துறையினர், வீட்டில் இருந்த பெண்களை மிரட்டியது ஆணையத்தின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதை காவல்துறையினரும் மறுக்கவில்லை. இது அப்பட்டமான மனித உரிமை மீறல் எனக் கூறியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு தமிழக அரசு இன்னும் ஒரு மாதத்திற்குள் 2.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன்.
மேலும், இத் தொகையில் தலா 25,000 ரூபாயை உதவி ஆணையர் உதயகுமார், இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோரிடம் இருந்தும், 2 லட்சம் ரூபாயை இன்ஸ்பெக்டர் மணிகண்டனிடம் இருந்தும் வசூலித்துக் கொள்ளலாம். அவர்கள் மீது விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.