தமிழக துணை முதல்வர் உதயநிதி திணிக்கப்பட்டதுபோல, அவரது மகன் இன்பநிதியையும் திமுகவிற்குள் திணிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக அக்கட்சியின் சீனியர்கள் முணுமுணுக்கிறன்றனர்.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில், இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) பதவி வழங்கப்பட்டுள்ளது. தனுஷின் ‘இட்லி கடை’ படத்தை வெளியிடுவதன் மூலம், தனது அப்பா உதயநிதி வழியல், அரசியலை நோக்கிய நகர்வின் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் இன்பநிதி. உதயநிதியின் திரைப்பயணமும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வழியாக தான் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மற்றும் த்ரிஷா நடித்த ‘குருவி’ திரைப்படம்தான் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் ஆகும். அதைத் தொடர்ந்து, கௌதம் மேனனின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் விநியோகஸ்தராக உருவெடுத்தார் உதயநிதி ஸ்டாலின்.

அதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக பல வெற்றிப் படங்களை அவர் வெளியிட்டார்.
அதுமட்டுமின்றி, 2009ல் வெளியான ‘ஆதவன்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததோடு, 2012ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார் உதயநிதி ஸ்டாலின். அத் திரைப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, ‘மனிதன்’, ‘நிமிர்’, ‘கண்ணே கலைமானே’, ‘சைக்கோ’, ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இந்நிலையில் தான், அவர் 2018 மார்ச் முதல் தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். 2019ஆம் ஆண்டு ஜுலை 19ஆம் தேதி திமுக இளைஞர் அணிச் செயலாளராக திணிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, 2021ல நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
2023ஆம் ஆண்டு வெளிவந்த ‘மாமன்னன்’ படத்துடன் தன்னுடைய திரையுலக பயணத்தை முடித்துக்கொண்ட உதயநிதி, அதன் பின்னர், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்றார்.
திமுகவில் அரசியல் அனுபவம் மற்றும் திறமை நிறைந்த சீனியர்கள் பலர் இருக்கும் நிலையில், அவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி இவ்வளவு குறுகிய காலத்தில் அவர் துணை முதல்வராக பொறுப்பேற்றது கட்சியின் சீனியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இருந்தாலும், கடைசிவரை பதவியை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, திண்டுக்கல் ஐ பெரியசாமி உள்ளிட்ட கட்சியின் சீனியர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் தங்களுக்கு நெருக்கமான நபர்களிடம் புலம்பி வருகின்றனர் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
இந்நிலையில், தனது அப்பா உதயநிதி வழியில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார் இன்பநிதி. இதனைத் தொடர்ந்து, விரைவில் அவர் கதாநாயகனாகவும் வெள்ளித் திரையில் தோன்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உதயநிதியைப் போலவே, அவரது மகன் இன்பநிதியும் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.