சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை கண்டெடுத்த கிளாரா என்ற தூய்மைப் பணியாளர் அதை நேர்மையாக காவல்துறையில் ஒப்படைத்ததற்கு, பாராட்டு தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ‘எளியவர்கள் எப்போதும் நேர்மையின் பக்கம்தான் என்பதற்கு தங்கை கிளாரா மற்றுமோர் எடுத்துக்காட்டு’ எனக் கூறியுள்ளார்.

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய தூய்மைப் பணியாளர் கிளாரா, சில தினங்களுக்கு முன், வழக்கம்போல, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மண்டபத்துக்கு எதிரே கிழக்கு கடற்கரை சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி ஒன்றை கண்டெடுத்தார். அதன்பின்னர், இதுகுறித்து தனது கண்;காணிப்பாளருக்கு முறையாக தகவல் தெரிவித்து, அச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

கிளாராவின் நேர்மையை சக ஊழியர்கள், போலீஸார் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தூய்மைப் பணியாளர் கிளாராவின் நேர்மையைப் பாராட்டி, சமூக வலைத்தளத்தில் வாழ்த்துச் செய்தி பதிவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

“தூய்மைப் பணியின்போது கண்டெடுத்த தங்கச் சங்கிலியை நேர்மையோடு காவல்துறையிடம் சகோதரி கிளாரா அவர்கள் ஒப்படைத்த செய்தியைப் பார்த்து நெகிழ்ந்தேன்.

எளியவர்கள் எப்போதும் நேர்மையின் பக்கம்தான் என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக மின்னிடும் தங்கை கிளாராவுக்கு எனது அன்பும் பாராட்டுகளும்!” எனக் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Comments are closed.