இந்திய ராணுவ அகாடமியின் 93 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பெண் அதிகாரி ஒருவர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் செயல்பட்டுவரும் இந்திய ராணுவ அகாடமி 1932ல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த அகாடமியில் இதுவரை 67,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், இதுவரை பெண்கள் எவரும் இந்த அகாடமியில் சேர்ந்து பட்டம் பெற்றதில்லை.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்த 23 வயதான சாய் ஜாதவ் என்ற பெண் இத் தடையை உடைத்து இந்திய ராணுவ அகாடமியில் பட்டம் பெற்ற முதல் பெண் அதிகாரி என்ற வரலாறை படைத்துள்ளார்.
குடும்பத்தில் ராணுவச் சீருடை அணியும் நான்காவது தலைமுறை உறுப்பினராக சாய் ஜாதவ் திகழ்கிறார். அவரது கொள்ளுத் தாத்தா பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றினார். அவரது தாத்தா இந்திய ராணுவத்தில் பணியாற்றி இருக்கிறார்.
மேலும், அவரது தந்தை சந்தீப் ஜாதவ் இந்திய ராணுவத்தில் இன்றும் தொடர்ந்து பணியாற்றுகிறார். இப்போது நான்காவது தலைமுறையாக சாய் ஜாதவ் ராணுவ அகாடமியில் தேர்ச்சி பெற்று, பிரதேச ராணுவத்தில் லெப்டினன்ட் ஆக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.