ஆந்திர முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியின் ‘ரோடு ஷோ’வுக்கு அம் மாநில போலீஸார், கரூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி, தடை விதித்துள்ளனர்.
ஜெகன்மோகன் ரெட்டி நாளை (அக்.9) அனகாபள்ளி மாவட்டம், நர்சி பட்டினம் மக்கவர பாலத்தில் மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்க உள்ளார். இதற்காக அவர் விஜயவாடாவில் இருந்து விமானம் மூலம் விசாரகப்பட்டினம் செல்கிறார்.
விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமான ‘ரோடு ஷோ’வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி ‘ரோடு ஷோ’ நடத்தினால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தமிழ்நாடு மாநிலம் கரூரில் நடந்ததுபோல் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளதாக கூறி போலீஸார் ‘ரோடு ஷோ’வுக்கு தடை விதித்துள்ளனர்.
இது குறித்து அனகாபள்ளி மாவட்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமர்நாத் ரெட்டி கூறுகையில், “அரசு எத்தனை தடை விதித்தாலும் சாலை பயணம் தொடரும். யார் எங்களைத் தடுக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்வோம்;. போலீஸாரிடம் அனுமதி கேட்டு கடிதம் தரவில்லை. தகவலுக்காக கொடுத்து இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.