பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசிய விஜய்!

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை  வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.

தவெக தலைவர் விஜய் செப்.27ஆம் தேதி கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அகில இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக, அக் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அக் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இத் துயரச் சம்பவத்தைத் தொடர்;ந்து, தவெக தலைவர் விஜய் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவியும் அறிவித்தார். இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விரைவில் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், பாதிக்கப்படட குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேற்று மாலை 4.30 மணியளவில் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் உயிரிழந்த தனுஷ்குமார் என்பவரின் தாய் மற்றும் தங்கையுடன் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார்.

தனுஷ்குமாரின் தாயை தொடர்பு கொண்டு பேசிய விஜய், “நடக்கக் கூடாத நிகழ்வு நடந்து விட்டது. எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு. எப்போதும் உங்கள் குடும்பத்துக்கு துணை நிற்பேன். விரைவில் உங்களை சந்திப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல, தனுஷ்குமாரின் தங்கை ஹர்ஷினியிடம் பேசிய விஜய், “ ஒரு அண்ணன் ஸ்தானத்தில் இருந்து எப்போதும் உங்களுக்காக துணை நிற்பேன். மேலும் நேரில் உங்களை நிச்சயம் சந்திப்பேன்” என ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தனுஷ்குமார் குடும்பத்தினருடன் சுமார் 20 நிமிடங்கள் விஜய் பேசியுள்ளார்.

தனுஷ்குமாரின் குடும்பத்தினருடன் விஜய் பேசியதை அவரது உறவினர் தமிழரசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, கூட்ட நெரிசிலில் உயிரிழந்த ஏனைய மற்றவர்களின் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Comments are closed.