சிறுமி பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த எட்டாம் வகுப்பு படித்துவந்த 13 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த ஷேக் பாவா என்பவர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இச்சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாகவும் அவர் அச் சிறுமியை மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது தாய் விசாரித்தபோது, நடைபெற்ற சம்பவங்களைக் கூறி சிறுமி அழுதாள். மேலும், அச் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஷேக் பாவாவை கைது செய்தனர்.

இவ் வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள் குற்றஞ்சாட்டப்பட்ட ஷேக் பாவாவுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

Comments are closed.