நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், தடையாணை இல்லாத நிலையில் தகவல்களை வழங்கலாம் என தமிழ்நாடு தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த ஏ.பி.சுப்பிரமணியன் என்பவர் நாகர்கோவிலில் குடிநீர் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளின் தகவல்களைத் தெரிவிக்க, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2022ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார்.
இம்மனு தொடர்பாக தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் மீண்டும் மேல்முறையீடு செய்தார். தொடர்ந்து அவர் 2ஆவது முறையாக மேல்முறையீடு செய்த மனு அக்.15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அம் மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர்.இளம்பரிதி, நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, அது குறித்த தகவல்களை வழங்க தடையிருந்தால், அது தொடர்பான தகவல்களை வழங்க இயலாது. ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், தடையாணை இல்லாத நிலையில் தகவல்களை வழங்கலாம்.
மேலும், மனுதாரர்களுக்கு தகவல் அளிக்க மறுக்கும்போது, அதற்கான முழு காரணங்களை ஆணையம் தெளிவாக வழங்க வேண்டும். அதேபோல், வருங்காலங்களில் பொதுத் தகவல் அலுவலர் பொருத்தமற்ற பிற வழக்குகளின் எண்களைக் குறிப்பிட்டு தகவலை மறுப்பது, தகவல் உரிமைச் சட்டத்துக்கு எதிரானதாகும்.
எனவே, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், தடையாணை இல்லாத நிலையில் தகவல்களை வழங்கலாம் என மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.