சிறப்பு எஸ்.ஐ சண்முகவேல் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (60), அவரது மகன் தங்கபாண்டியன் (25) ஆகியோர் தங்கி வேலை பார்த்து வந்தனர். இவர்களைப் பார்க்க மூர்த்தியின் மற்றொரு மகனான மணிகண்டன் (30) சிக்கனூத்து வந்தார்.
தந்தை-மகன்களுக்கிடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. அம்மூவரும் அரிவாளை கையில் வைத்துக் ஒருவரை ஒருவர் தாக்க முயற்சித்தனர். இதுகுறித்து பண்ணை மேலாளர் ரங்கசாமி குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல், காவலர் அழகுராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு ரத்தக் காயத்துடன் இருந்த மூர்த்தியைக் காப்பாற்ற ஆம்புலன்சுக்கு போன் போட்டுள்ளார் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல்.
அப்போது, அங்கே அரிவாளுடன் வந்த மணிகண்டன் அங்கிருந்தவர்களைத் தாக்க முயற்சித்துள்ளார். அவருடன் மூர்த்தி, தங்கபாண்டியன் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர்.
இதனால் அதிர்;ச்சியடைந்த சிறப்பு எஸ்.ஐ.சண்முகவேல், காவலர் அழகுராஜா மற்றும் பண்ணை மேலாளர் ரங்கசாமி ஆகியோர் அங்கிருந்து தப்பியோடினர். சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலால் நீண்ட தூரம் ஓட முடியவில்லை. அவரை விரட்டிச் சென்ற மணிகண்டன், அரிவாளால் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டியதில் சண்முகவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பின்னர், மூர்த்தி, தங்கபாண்டியன் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
இந்நிலையில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த மணிகண்டன் சிக்கனூர் அருகே உப்பாறு ஓடையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸார் அங்கு விரைந்து சென்று அவரைக் கைது செய்து சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றபோது காவலர்களைத் தாக்கிவிட்டு அவர் தப்பிக்க முயன்றதாகவும், மணிகண்டன் தாக்கியதில் சரவணக்குமார் என்ற உதவி ஆய்வாளர் காயமடைந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தற்காப்பிற்காக போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடல் மீட்கப்பட்டு உடல்கூறாய்வுக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.